ஏனையவை
அநுர அரசின் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பேன் : மொட்டுக்கட்சி உறுப்பினர் உறுதி
நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சானக மாதுகொட (Chanaka Madugoda) தெரிவித்து்ளளார்.
காலியில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பலமான ஆணையை வழங்கியுள்ளார்கள்.
மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். ஒத்துழைப்பு வழங்குவதற்கு அரசாங்கத்துடன் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது.
தேர்தலில் ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். காலி மாவட்ட மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படுவேன்.
தேசிய மக்கள் சக்திக்கு (NPP) தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இந்த மாற்றம் தேசிய நல்லிணக்கத்துக்கான சிறந்த முன்னேற்றமாகும்“ என தெரிவித்தார்.