ஏனையவை
மதுபான விற்பனை உரிமங்களை பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரம்
மதுபான விற்பனை உரிமங்களை பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரம்
அரசியல் பிளவுகளுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்கள் நண்பர்களினதோ உறவினர்களினதோ பெயர்களின் கீழ் மதுபான அனுமதிப் பத்திரங்களைப் பெற விரும்புகின்றனர் என மதுவரித்துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் புதிதாக 478 புதிய மதுபான விற்பனை நிலையங்களை நிறுவும் வகையில், மதுபான உரிமங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயர்களில் உரிமங்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், சிலர் இந்த அனுமதிகளை 50 மில்லியன் ரூபாவுக்கும் விற்பனை செய்துள்ளார்கள்.
அதேவேளை, பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் 100 மீற்றர் சுற்றளவில் எந்த மதுபான விற்பனையகங்களும் அனுமதிக்கப்படாது.
அத்துடன், மாநகரசபை பகுதிகளில் திறக்கப்படும் விற்பனையகங்களுக்கு 15 மில்லியன் ரூபாவும், நகர சபைக்குட்பட்ட பகுதிகளின் விற்பனையகங்களுக்கு 12.5 மில்லியன் ரூபாவும், பிரதேச சபையின் கீழ் வரும் விற்பனையகங்களுக்கு 10 மில்லியன் ரூபாவும் ஒருதடவை செலுத்தப்பட வேண்டும்.
அதேநேரம், வருடாந்த கட்டணங்களாக, மாநகரசபைக்கு உட்பட்ட விற்பனையகங்கள் 10 லட்சம் ரூபாவும், நகரசபை விற்பனையகங்கள் 8 லட்சம் ரூபாவும், பிரதேசசபை விற்பனையகங்கள் 6 இலட்ம் ரூபாவும் செலுத்தவேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.