உலகம்

குவைத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு

Published

on

குவைத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு

குவைத் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொது மன்னிப்பு அமுலுக்கு வருகிறது.

பொது மன்னிப்பு காலம் மார்ச் 17 முதல் ஜூன் 17 வரை என மூன்று மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது அபராதம் செலுத்தி ஆவணங்களை சட்டப்பூர்வமாக்கவோ வாய்ப்பளிக்கும் வகையில் இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான Sheikh Fahad Yousef Al Sabah இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்த முடிவு இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு நிம்மதியாக இருக்கும்.

இதன் மூலம் குவைத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியும்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடக பொதுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் தற்போது 1,10,000 சட்ட விரோதமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு காட்டுகிறது.

அவ்வாறு சட்ட விரோதமாக இருப்பவர்கள் இந்த பொது மன்னிப்பைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்களின் விசாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தில், சட்டவிரோதமாக குடியிருப்போர் அபராதம் அல்லது தண்டனை இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். அப்படிப்பட்டவர்கள் வேறு வேலை விசாவில் மீண்டும் குவைத்துக்கு வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் தங்க விரும்புவோர் அபராதம் செலுத்துவதன் மூலம் தங்கள் விசா ஆவணங்களை சரிபார்க்கலாம். அதிகபட்ச அபராதம் 600 தினார் வரை இருக்கும்.

நிதி வழக்குகளில் பயணத் தடையை எதிர்கொள்பவர்கள், அந்த வழக்கு தீர்க்கப்பட்ட பின்னரே நாட்டை விட்டு வெளியேற முடியும்.

இதற்கு முன்னதாக குவைத்தில் பொது மன்னிப்பு ஏப்ரல் 2020-இல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version