உலகம்

இலங்கை குடும்பத்தினருக்கு கனடாவில் இறுதிச்சடங்கு: நூற்றுக்கணக்கானோர் கண்ணீரஞ்சலி

Published

on

இலங்கை குடும்பத்தினருக்கு கனடாவில் இறுதிச்சடங்கு: நூற்றுக்கணக்கானோர் கண்ணீரஞ்சலி

கனடாவின் ஒட்டாவா பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தினருக்கு ஞாயிறன்று இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் கண்ணீரஞ்சலியும் செலுத்தியுள்ளனர். ஒட்டாவா நகர வரலாற்றிலேயே இதுபோன்ற மிக மோசமான சம்பவம் நடந்ததில்லை என்றே கூறப்படுகிறது.

பல மதத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். நான்கு சிறார்கள் உட்பட 6 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த கனடாவை உலுக்கியிருந்தது.

இறுதிச்சடங்கு நிகழ்வின் போது பேசிய புத்த துறவி Ajahn Viradhammo, விரக்தி அல்லது கோபத்தில் சமநிலை இழப்பதற்குப் பதிலாக ஒருவரையொருவர் ஆதரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இது போன்ற இருளடைந்த தருணங்களில், இதயத்தின் ஆழத்தில் இருக்கும் இரக்கம் மற்றும் ஞானத்திலிருந்து நாம் வலிமையைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான Darshani Ekanayake, இவரது நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவரும் மார்ச் 6ம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். முகம் மற்றும் கைகளில் காயங்களுடன் உயிர் தப்பிய தனுஷ்க விக்கிரமசிங்க (தர்ஷனியின் கணவர்) மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.

இறுதிச்சடங்கு நிகழ்வின் போது விக்கிரமசிங்க கண்ணீர் விட்டு அழுத நிலையிலேயே காணப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியபடி காணப்பட்டனர்.

பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்ட அறையில் 5 சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றில் தர்ஷனி மற்றும் அவரது இரண்டு மாத பிஞ்சு குழந்தையின் புகைப்படங்கள் காணப்பட்டன.

இறுதிச்சடங்கு நிகழ்வில் பௌத்த மத சடங்குகளும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த போதகர்களின் ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ சார்பில், இரங்கல் அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டது.

விக்கிரமசிங்க குடும்பமானது கனடாவிற்கு புதிதாக வந்த இலங்கையர்கள், இதில் நான்காவது பிள்ளை கனடாவில் பிறந்துள்ளார்.

படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது Febrio De-Zoysa என்ற இலங்கை இளைஞரை பொலிசார் சம்பவத்தன்றே கைது செய்திருந்தனர். அவர் மீது ஆறு முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

Exit mobile version