ஏனையவை

வடமாகாணத்தில் மீண்டுமொரு யுத்தம்!

Published

on

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் வகையில் மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், வடமாகாண காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் எதிர்காலத்தில் பிரிவினை யுத்தம் ஏற்படும் என அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க அவரது வாக்குறுதியை நிறைவேற்றினால், இலங்கைக்கு எதிரான பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நாடுகள், பிரிவினைவாத அமைப்புக்கோ அல்லது வடக்கு காவல்துறையினருக்கோ எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக ஆதரவளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மாகாண சபைகளிடமிருந்து காவல்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் சட்டமூலத்தை உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இலங்கையின் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இந்த தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.

Exit mobile version