உலகம்
இப்போதே வேண்டும்… விளாடிமிர் புடினுக்கு அதிரடி மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்
இப்போதே வேண்டும்… விளாடிமிர் புடினுக்கு அதிரடி மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா உடனடியாக தயாராக வேண்டும் என்றும், மறுத்தால், பொருளாதாரத் தடை அச்சுறுத்தலில் புதிய வரி விதிப்பையும் சேர்க்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யா இப்போதே ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது போரில் ஈடுபட்டுள்ள மற்ற நாடுகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது Truth சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் போர் தொடர்பில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைககளுடன் புதிய வரி விதிப்பும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
நாம் விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு விற்கப்படும் எந்தவொரு பொருளுக்கும் அதிக அளவு வரிகள், கட்டணங்கள் மற்றும் தடைகளை விதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன். உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள மற்ற நாடுகளுக்கும் இது பொருந்தும் என இருதரப்பு நட்பு நாடுகளையும் ட்ரம்ப் குறி வைத்துள்ளார். இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகமும், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பணிக்குழுவும் ட்ரம்பின் இந்த கருத்துக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
மேலும், ட்ரம்பின் பதிவில், போரில் பங்கேற்பாளர்கள் என்று அவர் கருதும் நாடுகள் எவை என அடையாளம் காணப்படவில்லை, அல்லது பங்கேற்பை அவர் எவ்வாறு வரையறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடப்படவில்லை.
பிப்ரவரி 2022 ல் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவின் வங்கி, பாதுகாப்பு, உற்பத்தி, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் செயல்படும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மீது பைடன் நிர்வாகம் ஏற்கனவே கடுமையான தடைகளை விதித்துள்ளது.
மட்டுமின்றி, இந்த மாத தொடக்கத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களான Gazprom Neft மற்றும் Surgutneftegas நிறுவனங்கலை குறிவைத்து, ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான தடைகளால் பாதிப்புக்கு உள்ளாக்கியது.
அத்துடன் மேற்கத்திய வர்த்தக தடைகளைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட வணிக கப்பல்களின் ரகசிய சேவை என்று அழைக்கப்படும் 183 கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் முதல் 11 மாதங்களில் அமெரிக்காவுக்கான ரஷ்ய ஏற்றுமதி என்பது 2.9 பில்லியன் டொலர் என கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் உக்ரைன் போருக்கு முன்னர் 2021ல் 29.6 பில்லியன் அமெரிக்க டொலர் என இருந்தது குறிப்பிடத்தக்கது.