உலகம்
தெற்கு கலிபோர்னியாவில் புதிய காட்டுத் தீ; 30,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் புதிய காட்டுத் தீ பரவியதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே, “ஹியூஸ் தீ”(Hughes Fire,) என்று அழைக்கப்படும் வேகமாகப் பரவும் காட்டுத் தீ காரணமாக 30,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லேக் காஸ்டிக்(Lake Castaic) அருகே புதன்கிழமை காலை இந்த தீ தோன்றியது.
இது சமீபத்தில் ஈட்டன்(Eaton) மற்றும் பாலிசேட்ஸ்(Palisades) காட்டுத்தீகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ளது.
கலிபோர்னியா வனவியல் மற்றும் தீயணைப்புத் துறை (கால் ஃபயர்) வெளியிட்ட அறிக்கையின்படி, ஹியூஸ் தீ ஏற்கனவே 9,400 ஏக்கர் பரப்பளவில் பரவி உள்ளது மற்றும் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
அதிகாரிகள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தி, உடனடியாக வெளியேறும்படி 31,000-க்கும் அதிகமான மக்களை வலியுறுத்தினர்.
இது காஸ்டிக் நகரத்தின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும்.
மேலும் 25,000 பேர் வெளியேற்ற எச்சரிக்கை பகுதிகளில் உள்ளனர்.
சமீபத்திய வாரங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் அழிவுகரமான காட்டுத்தீகளால் சிரமங்களை எதிர் கொண்டு வரும் தெற்கு கலிபோர்னியாவில் இந்த புதிய காட்டுத் தீ மேலும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.