உலகம்
ட்ரம்பின் மிரட்டலுக்கு மிரண்ட கனடா… பேச்சின் தொனியை மாற்றிய கனடா பிரதமர் ட்ரூடோ
ட்ரம்பின் மிரட்டலுக்கு மிரண்ட கனடா… பேச்சின் தொனியை மாற்றிய கனடா பிரதமர் ட்ரூடோ
கனடா மீது 25 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அவர் வரி விதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என கூறிவந்தார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
ஆனால், தற்போது அவர் பேசும் தொனியே மாறிவிட்டது!
அமெரிக்கா வரி விதித்தால், அவர்களுக்கு வலிக்கும் அளவில் பதிலடி கொடுப்போம் என எச்சரித்துவந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இப்போது அமெரிக்கா பொற்காலத்தை அடைவதற்கு ட்ரம்புக்கு உதவப்போவதாக பேச்சை மாற்றிவிட்டார்.
தனது பதவியேற்பு விழா உரையில், கனடா மீது வரிகள் விதிப்பது குறித்து ட்ரம்ப் எதுவும் பேசவில்லை. அதனால் கனடா தரப்பு சற்றே ஆசுவாசப்பட, ஊடகவியலாளர் ஒருவர் கனடா குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்ப, கனடாவுக்கு நாள் குறித்தார் ட்ரம்ப்.
ஆம், பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி கனடா மீதும் மெக்சிகோ மீதும் வரி விதிப்பு அமுலுக்கு வரும் என்று ட்ரம்ப் கூற, கனடாவுக்கு கிலி பிடித்துவிட்டது போலிருக்கிறது.
ஆக, ட்ரம்பின் எச்சரிக்கை பலிக்க இன்னும் சில நாட்கள்தான் உள்ளன என்பதால், என்ன முடிவெடுப்பது என கனடா தீவிரமாக யோசிக்கத் துவங்கியுள்ளது.
ஆக, ட்ரம்ப் கனடா மீது வரி விதித்தால், பதிலுக்கு அமெரிக்கா மீது வரி விதிப்பதா, அதாவது பழிக்குப் பழியா அல்லது சமாதானமாகப் போவதா என்னும் முடிவெடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது கனடா.
இந்நிலையில், அமெரிக்கா கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதித்தால், அது கனடாவின் பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஆக, ட்ரம்புடன் சண்டைக்குப் போவதைவிட, அமெரிக்காவுடனான வர்த்தகப்போரை தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்.
அதை ட்ரூடோ புரிந்துகொண்டிருப்பார் போலும், இதுவரை ட்ரம்புடன் சண்டைக்குப் போவதுபோல பேசிக்கொண்டிருந்த அவருடைய பேச்சின் தொனியில் இப்போது மாற்றம் தெரிகிறது.
அமெரிக்காவின் பொற்காலத்தை எட்ட ட்ரம்புக்கு உதவப்போவதாக தற்போது உறுதியளித்துள்ளார் ட்ரூடோ!