உலகம்
உக்ரைனின் அதிரடி ஆட்டம் : ரஷ்யாவிற்குள் ஊடுருவிய 146 ஆளில்லா விமானங்கள்
ரஷ்யா (Russia) முழுவதும் தீவிரமான 146 ஆளில்லா விமான தாக்குதலை உக்ரைன் (Ukraine) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து நேற்றைய தினம் (14.01.2025) இந்த ஆளில்லா விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாக்குதலில், 146 ஆளில்லா விமானங்கள் மற்றும் பல ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவற்றில் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட 6 ATACMS குறுகிய வரம்பு ஏவுகணைகள் மற்றும் பிரிட்டனால் வழங்கப்பட்ட 6 Storm Shadow கப்பல் ஏவுகணைகள் அடங்கும்.
இந்த தாக்குதல்கள் எங்கெல்ஸ், சரடோவ், கசான், பிரியான்ஸ்க் மற்றும் துலா உள்ளிட்ட பரந்த பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
ஆயுத உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளும் இதன் போது குறிவைக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதல்களை “பெருமளவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்” என்று வர்ணித்துள்ளதுடன் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளின் நடவடிக்கைகள் தண்டிக்கப்படாமல் இருக்காது என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.