உலகம்
தீவிரம் காட்டும் ரஷ்யா: அம்பலமான உக்ரைனிய படுகொலை திட்டங்கள்
வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மொஸ்கோவில் உயர் பதவியில் இருக்கும் ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கொல்ல உக்ரைன் உளவுத்துறையின் பல சதித்திட்டங்களை முறியடித்துள்ளதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் கிரிலோவ், மொஸ்கோவில் அவரது அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே குண்டு வெடிக்கச் செய்து கொல்லப்பட்டார்.
அதனை தொடர்ந்து, SBU என்ற உக்ரேனிய புலனாய்வு அமைப்பு குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக தெரியவந்தது.
இந்த நிலையில், ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட இராணுவ வீரர்கள் மீதான தொடர்ச்சியான படுகொலை முயற்சிகளைத் தடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்போது, ரஷ்ய குடிமக்கள் உக்ரேனிய புலனாய்வு சேவைகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, இந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படவிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக FSB தெரிவித்துள்ளது.
இதன்படி, தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு ரஷ்ய குடிமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள், தாக்குதல்களுக்கான வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மொஸ்கோவில் போர்ட்டபிள் சார்ஜர் போல தாயரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவரின் காரில் காந்தங்களுடன் இணைக்கப்படவிருந்ததாகவும் FSB தெரிவித்துள்ளது.
மேலும், மற்றொரு ரஷ்ய நபர், மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் உளவுத்துறையை இலக்கு வைத்து, ஒரு ஆவணக் கோப்புறை போல் தாயரிக்கப்பட்ட வெடிகுண்டை வழங்குவதற்கு முயற்சி செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டதாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.