உலகம்

டெர்மினேட்டர் குறித்து வெளியான இலங்கை பொலிஸின் பதில்

Published

on

கொழும்பில் (Colombo) இஸ்ரேலிய சிப்பாயான கால் ஃபெரன்புக் (Gal Ferenbook) தங்கியிருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இலங்கையின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘டெர்மினேட்டர்’ என்று அழைக்கப்படும் ஃபெரன்புக், ஒரு பாலஸ்தீனிய குடிமகனின் மரணத்திற்கும், அவரின் உடலை இழிவுபடுத்தியதற்கும் பொறுப்பானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட அமைப்பான ஹிந்த் ரஜாப் அறக்கட்டளை, கடந்த வாரம், ஃபெரன்புக்கின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் இலங்கைக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.

காசாவில் ஒரு பாலஸ்தீனிய குடிமகனை கொலை செய்தமைக்காக, அவரைக் கைது செய்ய இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்டர்போலிடம் முறையிட்டதாக அது தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், இலங்கையில் தங்கியிருப்பதாக கூறப்படும் ஃபெரன்புக்கைக் கைது செய்ய வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டுப் போராட்டமும் நடைபெற்றது.

எனினும் ஹிந்த் ரஜப் அறக்கட்டளையின் அறிக்கைகளைத் தவிர, இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் அதிகார பூர்வ ஆதாரம் கிடைக்கவில்லை என்று இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version