உலகம்
200,000 சிறார்கள்… நாட்டையை உலுக்கிய கொடூர சம்பவம்: பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பிரதமர்
200,000 சிறார்கள்… நாட்டையை உலுக்கிய கொடூர சம்பவம்: பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பிரதமர்
நியூசிலாந்தில் காப்பகங்களில் துஸ்பிரயோகத்திற்கு இரையானவர்களிடம் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
நாட்டையே மொத்தமாக உலுக்கிய விவகாரம் தொடர்பில் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே பிரதமர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த 1950 தொடங்கி 2019 வரையில் 200,000 சிறார்கள் மற்றும் இளையோர்கள் காப்பகங்களில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு இலக்கானது கண்டறியப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாவோரி மற்றும் பசிபிக் சமூகங்களை சேர்ந்தவர்கள். மட்டுமின்றி உளவியல் அல்லது உடல் ரீதியான ஊனமுற்றவர்கள் என்றே அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், காப்பகங்களின் அமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்சன், எனது சொந்த மற்றும் முந்தைய அரசாங்கங்கள் சார்பாக உயிர் பிழைத்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது பயங்கரமான சம்பவம். நெஞ்சை பதறவைக்கும் விவகாரம், இது ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்றும் லக்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் நியூசிலாந்தில் இதுவரை முன்னெடுக்கப்படாத வகையிலான விசாரணை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையை முழுமையாக முடிக்க நீண்ட 6 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும், இதில் தற்போது உயிருடன் இருக்கும் 2300 பேர்களிடம் நேர்காணலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதில் வன்கொடுமை, கருத்தடை, மற்றும் கட்டாயப்படுத்துதல் உட்பட பல்வேறு துஸ்பிரயோகங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமின்றி, மத நம்பிக்கை தொடர்பான காப்பகங்களில் துஸ்பிரயோகம் அதிக அளவில் நடந்தேறியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் நீதி கிடைக்கும் முன்னரே மரணமடைந்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு முறையான திட்டம் இல்லை என்றால் லக்சனின் மன்னிப்புக் கோரிக்கையானது வெறும் வெற்று வார்த்தை என்றே பாதிக்கப்பட்டவர்கள் வாதிட்டுள்ளனர்.
விசாரணை அமைப்பு அளித்துள்ள 28 பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவு செய்துவிட்டது அல்லது அது தொடர்பான பணியில் உள்ளது என்று லக்சன் தெரிவித்துள்ளார், ஆனால் அது தொடர்பான விளக்கத்தை அவர் வெளியிடவில்லை.
மேலும், செவ்வாய்க்கிழமை மன்னிப்புக் கேட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நவம்பர் 12 அன்று தேசிய நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்றும் லக்சன் அறிவித்துள்ளார்.