உலகம்
சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு
சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு
கனடாவில் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச மாணவர் விரைவு (Student Direct Stream) (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவில் இந்த திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்டதே இந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
எனினும், வெளிநாட்டினர் அதிகளவில் கனடா வருவதால் அங்கு குடியிருக்க வீடு கிடைப்பது சிரமமாகிவிட்டது. அத்துடன், அங்கு குடியேறும் மக்களுக்கு இதர வசதிகள் செய்து தருவதிலும், வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே சர்வதேச மாணவர்களுக்கு விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது.
இதன்படி, இந்த விசா திட்டங்களை 2024 நவம்பர் 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியுடன் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.