உலகம்
22 பேருடன் மாயமான ரஷ்ய உலங்கு வானுர்தி : தேடுதல் பணிகள் தீவிரம்
22 பேருடன் மாயமான ரஷ்ய உலங்கு வானுர்தி : தேடுதல் பணிகள் தீவிரம்
ரஷ்யாவில்(Russia) எம்ஐ-8டி ரக உலங்கு வானூர்தி ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்ட சில மணி நேரங்களில் தொடர்பை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உலங்கு வானூர்தியில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய உலங்கு வானூர்தி நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, மாயமான உலங்கு வானுர்தியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
1960களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் உலங்கு வானுர்தியான எம்ஐ-8 ரஷ்யாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக ஓகஸ்ட் 12 ஆம் தேதி, 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 உலங்கு வானுர்தி ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது.
கம்சட்கா தீபகற்பம் அதன் இயல்புக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இது மாஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கி.மீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.