உலகம்

பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி

Published

on

பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் 74வீத மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளுக்கு கூட வருமானம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்கள் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாவது கடந்த ஓராண்டு காலத்தில் 14 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நகர்ப்புற பகுதிகளில் பல்ஸ் கொன்சல்டண்ட் என்ற அமைப்பு மக்களின் பொருளாதார சூழல்கள் குறித்து ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற மக்களில் 74 வீத மக்கள், தங்களின் மாதாந்த செலவினங்களுக்கு போதுமான வருமானத்தை கூட ஈட்ட முடியவில்லை.

இது 2023 ஆம் ஆண்டில் 60 வீதமாக இருந்த நிலையில் தற்போது 74 என உயர்ந்துள்ளது.

இதனையடுத்து 60 வீதமானோர் தமக்கான மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவினங்களை கூட குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

40 வீதமானோர்; மாதந்தோறும் கடன் வாங்கி தான் தங்களது செலவுகளை மேற்கொள்கிறார்கள் அத்துடன் 10 வீதமானோர் தங்களுடைய பிரதான வேலை போக பகுதிநேர வேலைக்கு சென்று தான் தங்களின் செலவினங்களை கவனித்துக் கொள்கிறார்கள்.

பாகிஸ்தான் 240 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாகும். அங்கே 56 வீத மக்கள் தங்களுடைய வருமானத்தை அப்படியே செலவு செய்கின்றனர்.

செலவு போக எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பதற்கு அவர்களிடம் எந்த தொகையும் மீதம் இருப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் கடன் வழங்கியுள்ளன. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கூட உதவிக்கரம் நீட்டியுள்ளன.

Exit mobile version