உலகம்

பெண்களுக்கு திருமண வயது 9… மொத்த மக்களையும் கொதிப்படைய செய்த நாடொன்றின் முடிவு

Published

on

பெண்களுக்கு திருமண வயது 9… மொத்த மக்களையும் கொதிப்படைய செய்த நாடொன்றின் முடிவு

ஈராக் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட பிரேரணை ஒன்று ஒட்டுமொத்த மக்களையும் கொதிப்படைய செய்துள்ளது.

பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 என குறைக்க வேண்டும் என்ற பிரேரணையை ஈராக் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளனர். தற்போது 18 என இறுதி செய்யப்பட்டுள்ள திருமண வயதை சரிபாதியாக குறைக்கவே விவாதத்திற்குரிய இந்த சட்டத்தை நீதித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்க குடிமக்கள் மதத் தலைவர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகளைத் தெரிவு செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான ஆண்கள் குடும்ப விவகாரத்தில் மதத் தலைவர்களையே தெரிவு செய்ய வாய்ப்புள்ளதால் இது வாரிசுரிமை, விவாகரத்து மற்றும் குழந்தைப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரேரணை சட்டமானால், பெண்களுக்கு திருமண வயது 9 என்றும் ஆண்களின் திருமண வயது 15 எனவும் இருக்கும். இதனால் சிறார் திருமணம் மற்றும் ஏமாற்றப்படுதல் அதிகரிக்கும் என்றே அச்சம் எழுந்துள்ளது.

மேலும், இந்த பிற்போக்கு நடவடிக்கை பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் பல தசாப்தங்களாக முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

அத்துடன் இளம் சிறுமிகளின் கல்வி, உடல்நலம் உட்பட அனைத்தும் பாழாகும் என்றே மனித உரிமைகள், மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே UNICEF வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஈராக்கில் 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.

ஜூலை மாதம் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து குறித்த சட்டத்தை திரும்பபெற்றனர். ஆனால் சக்திவாய்ந்த ஷியா தலைவர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில் ஆகஸ்டு மாதம் மீண்டும் முன்மொழிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version