உலகம்

சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நேட்டோ கூட்டமைப்பு

Published

on

சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நேட்டோ கூட்டமைப்பு

நேட்டோ அமைப்பின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் நிறைவாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 32 பேரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சீன அரசின் விருப்பங்கள் மற்றும் கட்டாயக் கொள்கைகள் தொடர்ந்து நமது நலன்கள், பாதுகாப்பு மற்றும் மதிப்புகளுக்கு சவால் விடுவதாக உள்ளன.

அதேபோல் ரஷ்யா-சீனா ஆகிய இருநாடுகளும் தங்களது உறவுகளை வலுப்படுத்துவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஒரு தீர்க்கமான உதவியாளராக இருந்து ரஷ்யாவை சீனா இயக்குகிறது.

பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த வர்த்தகம் என்ற போர்வையில் ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கு தேவையான இராணுவ தளவாடங்களை சீனா வாரி வழங்கி வருகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்தும் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

எனவே ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு வழங்கி வரும் அனைத்து பொருள் மற்றும் அரசியல் ஆதரவை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேட்டோ அமைப்பின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா. நேட்டோவுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version