உலகம்
கடும் பின்னடைவில் கன்சர்வேட்டிவ் கட்சி… அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில்
கடும் பின்னடைவில் கன்சர்வேட்டிவ் கட்சி… அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில்
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துவரும் நிலையில், ரிஷி சுனக் அமைச்சரவையின் அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் Grant Shapps, Alex Chalk மற்றும் Penny Mordaunt ஆகிய மூத்த கன்சர்வேட்டிவ் தலைவர்கள் வெறிவாய்ப்பை இழந்துள்ளனர். மட்டுமின்றி, அமைச்சர்கள் பலர் தோல்வி முகத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், கன்சர்வேட்டிவ் கட்சியின் பல மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் தங்கள் வெற்றிவாய்ப்பை இழப்பார்கள் என்றே கூறப்படுகிறது.
ரிஷி சுனக் அமைச்சரவையின் பாதுகாப்பு அமைச்சரான Grant Shapps, நீண்ட 19 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக நீடித்தவர், தற்போது தோல்வி கண்டுள்ளார். லேபர் கட்சி வேட்பாளரிடம் 3,799 வாக்குகளுக்கு Grant Shapps வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்பட்டது போன்று நீதித்துறை அமைச்சர் Alex Chalk வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். கல்வி அமைச்சர் Gillian Keegan கடந்த 2017 முதல் தக்கவைத்து வந்த Chichester தொகுதியில் தோல்வி கண்டுள்ளார்.
2010 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த Simon Hart இந்தமுறை தோல்வி கண்டுள்ளார். 2010 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரசா மே அமைச்சரவையில், நாட்டிலேயே முதல்முறையாக பெண் பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்புக்கு வந்த Penny Mordaunt தற்போது தோல்வி கண்டுள்ளார்.
இதேப்போன்று கலாச்சார அமைச்சர் Lucy Frazer கடந்த 2015 முதல் தக்கவைத்து வரும் தொகுதியில் தோல்வி கண்டுள்ளார். ரிஷி சுனக் அமைச்சரவையில் நிதியமைச்சரான Jeremy Hunt தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உறுதியானால் நவீன பிரித்தானிய வரலாற்றில் வெற்றிவாய்ப்பை இழக்கும் முதல் நிதியமைச்சராக Jeremy Hunt அறியப்படுவார்.
2005 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்துள்ள Jeremy Hunt, இரண்டு முறை பிரதமர் பதவிக்கு முயன்று தோல்வி கண்டார். Forest of Dean தொகுதியில் 2005 முதல் நீடிக்கும் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் Mark Harper தோல்வி முகம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.