உலகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த சீமான்! பெண் மருத்துவருக்கு வாய்ப்பு

Published

on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த சீமான்! பெண் மருத்துவருக்கு வாய்ப்பு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 -ம் திகதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை ஜூன் 10 -ம் திகதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இன்று முதல் (ஜூன் 14) வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை அதிமுக மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “வருகின்ற ஜூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட அபிநயா, 65,381 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version