உலகம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல்
ஹமாஸ் படைகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது அவர்கள் தந்திரம் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், ரஃபா மீது புதிதாக வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து காஸா பகுதிகள் மீது தாக்குதலை முன்னெடுக்கும் என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கட்கிழமை இரவு தெரிவித்திருந்தார்.
எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் முன்வைத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் படைகள் ஏற்பதாக தகவல் வெளியான சில மணி நேரத்தில், ரஃபா மீதான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதுடன், ஹமாஸ் படைகளின் முடிவை தாங்கள் நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளது.
ரஃபா மீதான தாக்குதல் தொடரும் என்று உறுதிபட தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்கும் வரையில் இந்த அழுத்தம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த போரின் இலக்கை எட்டும் வரையில், இஸ்ரேலின் நடவடிக்கை தொடரும் என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் படைகளை குறிவைத்து தெற்கு காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரின் கிழக்கில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஃபா பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற அறிவுறுத்தல் முன்னெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது.
மட்டுமின்றி, ரஃபா மக்களை ஹமாஸ் படைகள் மனிதக் கேடயமாக பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும், 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் நகரின் கிழக்குப் பகுதிகளிலிருந்து விரைவாக வேறு பகுதிக்கு தஞ்சம் அடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கத்தார் பிரதமருக்கும், எகிப்து உளவுத்துறை அமைச்சருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே போர் நிறுத்த ஒப்பந்தம் கட்டாயம் என்பதை கோரியுள்ளார். மட்டுமின்றி, ஹமாஸ் படைகளும் போர் நிறுத்தம் தேவை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.