உலகம்

பசியின் கொடூரம் மண், இலைகளை சாப்பிடும் மக்கள்

Published

on

பசியின் கொடூரம் மண், இலைகளை சாப்பிடும் மக்கள்

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக விவசாய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாத காரணத்தால் மக்கள் பசியின் கொடுமை தாங்க முடியாது மண், இலை, குழைகளை சாப்பிடும் அவலநிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறையவில்லை.

சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர், உள்நாட்டு போரில் காயமடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 – க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம்பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.

மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை இராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.

உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

Exit mobile version