உலகம்

நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார் : ஹமாஸ் அறிவிப்பு

Published

on

நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார் : ஹமாஸ் அறிவிப்பு

பாலஸ்தீனிய ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேலான போர்நிறுத்தத்திற்கு உடன்படத் தயாராக உள்ளது என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவர் கலில் அல்-ஹய்யா( Khalil al-Hayya) தெரிவித்துள்ளார்.

1967 க்கு முந்தைய எல்லைகளுடன் ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிடவும் அரசியல் கட்சியாகவும் மாற ஹமாஸ் படைகள் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருக்கும் நிலையில், கலில் அல்-ஹய்யா( Khalil al-Hayya) ஹமாஸ் தொடர்பில் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேலின் அழிவு மட்டுமே தங்களின் கொள்கை என கூறிவந்த ஹமாஸ் படைகள் தற்போது ஆயுதங்களைக் கைவிடுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்க சலுகையாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் இஸ்ரேல் இந்த நிபந்தனைகளை கருத்தில் கொள்ளாது என்றே கூறப்படுகிறது. அக்டோபர் 7ம் திகதி முன்னெடுத்த தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி 1967 போரில் இஸ்ரேல் கைப்பற்றிய நிலங்களில் பாலஸ்தீன அரசை உருவாக்குவதை நெதன்யாகு அரசாங்கம் கடுமையாக எதிர்த்தும் வருகிறது.

ஆனால் சுதந்திர பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட்டால் ஆயுதங்களைக் கைவிட்டு, ஹமாஸ் இயக்கத்தையும் கலைத்துவிட தாங்கள் தயார் என Khalil al-Hayya தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடு தீர்வை அவர்கள் ஏற்றுக்கொள்வதால் இஸ்ரேலுடனான பாலஸ்தீன மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அல்-ஹய்யா வெளிப்படையாக கூறவில்லை.

இரு நாடு தீர்வை பல்வேறு உலக நாடுகள் ஆதரித்த போதும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடும்போக்கு அரசாங்கம் அதனை நிராகரித்தே வந்துள்ளது.

காஸாவில் போர் ஏறக்குறைய ஏழு மாதங்களாக நீடித்து வரும் நிலையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version