இந்தியா

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு

Published

on

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு

வருடத்தின் முதல் 14 வாரங்களுக்குள் 700,000 சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் (2024) ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை மொத்தம் 718,315 சர்வதேச சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு, இலங்கையில் மொத்தம் 82,531 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதால், இது நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி வேகத்தைப் பேணுவதை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதுவே கடந்த ஆண்டு (2023) சுற்றுலாப்பயணிகள் தினசரி வருகை சராசரியாக 3000-க்குக் கீழே இருந்த நிலை தற்போது 5,502 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் மொத்த சுற்றுலாப்பயணிகள் வருகை எண்ணிக்கை 182,724 ஐ இலக்காகக் கொண்டுள்ளது, இந்த இலக்கை அடைய தினசரி சராசரியாக 5,617 முதல் 6,090 எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் வருகை எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய வருகைப் போக்கு நீடித்தால், கடந்த ஆண்டு ஏப்ரலில் பதிவு செய்யப்பட்ட 105,498 வருகையாளர்களை மிகைப்படுத்தும் போக்கில் நாடு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வருகையில் 17 சதவீதத்தைக் கொண்டு, இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அடுத்து 11 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் ஐக்கிய இராச்சியமும்,10 சதவீத பங்களிப்புடன் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அந்தவரிசையில் ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version