உலகம்

பாகிஸ்தானில் பேருந்திலிருந்து கடத்தப்பட்ட 9 பேர் சுட்டுக்கொலை

Published

on

பாகிஸ்தானில் பேருந்திலிருந்து கடத்தப்பட்ட 9 பேர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான்(Afghanistan) மற்றும் ஈரான்(Iran) எல்லையை ஒட்டிய தென்மேற்கு பாகிஸ்தானில்(Pakistan) பேருந்தில் இருந்து கடத்தப்பட்ட ஒன்பது பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம்(12) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் நடந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகின்றது.

கனிம வளங்கள் நிறைந்த இந்தப் பிராந்தியத்தில் பிரிவினைவாத இன பலூச் போராளிக் குழுக்கள் பல தசாப்தங்களாக அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.

பிராந்திய வளங்களில் தங்களின் பங்கை மறுப்பதாகக் கூறியே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஈரானுக்குச் செல்லும் பேருந்தை மறித்த துப்பாக்கிதாரிகள், அதில் இருந்த ஒன்பது பேரும் பஞ்சாபின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்ததன் பின்னர் அவர்களை கடத்திச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்த்தின் பின்னர், பாலம் ஒன்றின் அடியில் இருந்து பேருந்தில் பயணித்தவர்களது குண்டுகள் துளைக்கப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அண்டை நாடான சீனாவால் உருவாக்கப்பட்ட ஆழ்கடல் குவாதர் கடல் துறைமுகம் அமைந்துள்ள இந்த பிராந்தியத்தில் முன்னர் இடம்பெற்ற இதே போன்ற கொலைகளுக்கு, பலூச் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றிருந்தனர்.

இந்த கிளர்ச்சியாளர்கள் சீன நாட்டினரையும் அவர்களின் நலன்களையும் குறிவைத்துள்ளனர். அத்துடன் பொருளாதார வழித்தடத்தின் கீழ் சீனா 65 பில்லியன் டொலர்களை இந்தப் பிராந்திய வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

Exit mobile version