உலகம்

போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லவுள்ள 6000 இந்திய தொழிலாளர்கள்

Published

on

போருக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லவுள்ள 6000 இந்திய தொழிலாளர்கள்

ஹமாஸுடனான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 6 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேல் செல்லவுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் (Israel – Hamas War) ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளது.

போரினால் காஸா பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்தனர். தங்குவதற்கு வீடு, உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர்.

இதனிடையே, ஹமாஸுடனான மோதல்களால் இஸ்ரேலின் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. தற்போது இத்துறையில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது.

போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேலில் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.

இதுவரை, மேற்குக் கரையைச் சேர்ந்த 80,000 பேரும், காஸாவைச் சேர்ந்த 17,000 பேரும் வேலை செய்து வந்தனர்.

ஆனால், சமீபத்திய மோதல்களை அடுத்து, இஸ்ரேல் அவர்களின் பணி அனுமதியை ரத்து செய்தது. இதனால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டில் இருந்து தொழிலாளர்களை இஸ்ரேல் அழைக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து 6,000 கட்டுமான தொழிலாளர்கள் அங்கு செல்லவுள்ளனர்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் கட்டுமான அமைச்சகம் ஆகியவை கூட்டாக பயண செலவுகளில் சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளன.

இது குறித்து, புதன்கிழமை இரவு இஸ்ரேல் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.

Exit mobile version