உலகம்

இந்திய இராணுவத்தை விரட்டும் மாலைதீவு!

Published

on

இந்திய இராணுவத்தை விரட்டும் மாலைதீவு!

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவப் படையின் 2-ஆவது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபா் மூயிஸ் தெரிவித்துள்ளாா்.

மாலைதீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது.

அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டனா்.

அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு சீன ஆதரவாளரான அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். இதனால் இந்தியா, மாலைதீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கடந்த பெப்ரவரி 2-ஆம் திகதி டெல்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், மே 10-ஆம் திகதிக்குள் மாலைதீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பஅனுப்பப்படுவார்கள் என மாலைதீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது.

அதேவேளையில், மாலைதீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானத்தை பராமரித்து இயக்க, இந்திய இராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை அந்நாட்டுக்கு மத்திய அரசு அனுப்ப மாலைதீவு ஒப்புக்கொண்டது.

இதையடுத்து மாலைதீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டருக்கு பொறுப்பேற்க இராணுவம் அல்லாத 26 போ் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இதைத்தொடா்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்னா், அந்நாட்டில் இருந்து சுமாா் 25 இந்திய இராணுவ வீரா்கள் அடங்கிய முதல் குழு தாயகம் திரும்பியது.

இந்நிலையில், மாலைதீவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிபா் மூயிஸ் பேசுகையில், ‘இந்த மாதத்துக்குள் இந்திய படையினரின் 2-ஆவது குழுவும், மே 10-க்குள் இந்திய படையினரின் 3-ஆவது குழுவும் மாலைதீவில் இருந்து வெளியேறும்’ என்று கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version