உலகம்

கச்சத்தீவு, சீன ஆக்கிரமிப்பு விவகாரம்.., பிரதமர் மோடியை ஆவேசமாக விமர்சித்த தமிழக முதலமைச்சர்

Published

on

கச்சத்தீவு, சீன ஆக்கிரமிப்பு விவகாரம்.., பிரதமர் மோடியை ஆவேசமாக விமர்சித்த தமிழக முதலமைச்சர்

இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஆவேசமாக விமர்சித்துள்ளார்.

வேலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் கூட்டத்தில் பேசிய போது, “பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் பழைய விடயங்களை சொல்லி குழப்பி அதன் மூலம் ஆதாயம் தேட பார்க்கிறார். அப்படி அவர் முயற்சி செய்வது தான் கச்சத்தீவு பிரச்சினை.

இந்திய அரசு இலங்கைக்கு கச்சதீவை கொடுத்தது பற்றி இப்போது பேச ஆரம்பித்தது அவர்களுக்கே எதிராக திரும்பிவிட்டது. 2014 -ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பாஜக, கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கூறியது.

ஆனால், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை இலங்கைக்கு சென்றிருப்பார். அப்போது, ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரை சந்தித்த போது கச்சத்தீவு நியாபகம் இல்லையா?

கடந்த 2022-ம் ஆண்டு சென்னைக்கு வந்த மோடி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்த போது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன்.

2015-ல் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த ஜெய்சங்கர் கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என்று பாஜக கூறியுள்ளது. இப்போது தேர்தல் வரும் நேரத்தில் தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறது. அதை பற்றி மோடி வாய் திறந்தாரா?

இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா? மோடியின் நாடகம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான்” என்று பேசியுள்ளார்.

Exit mobile version