உலகம்

Baltimore Ship Accident : இந்தியர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு

Published

on

Baltimore Ship Accident : இந்தியர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு

அமெரிக்காவிலுள்ள பால்ட்டிமோர் என்னுமிடத்தில் அமைந்துள்ள பாலம் ஒன்றின்மீது கப்பல் ஒன்று மோதியதில் அந்த பாலத்தின் ஒரு பகுதி நிலைகுலைந்து சரிந்தது. அந்த நேரத்தில், கப்பல் ஊழியர்கள் அதிகாரிகளை எச்சரித்ததால், பாலத்தின் மீது போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1.27 மணியளவில், அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரில் அமைந்துள்ள Patapsco நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள Francis Scott Key Bridge என்னும் பாலத்தின் மீது, சரக்குக் கப்பல் ஒன்று மோதியது. அந்த பாலத்தைத் தாங்கியிருக்கும் இரும்புத் தூண் மீது, அந்த சரக்குக் கப்பல் மோதியதில், பாலத்தின் ஒரு பகுதி நிலைகுலைந்து சரிந்தது.

பாலம் நிலைகுலைந்து விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்களில் பயணித்தவர்களின் நிலை என்ன என்னும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அந்தக் கப்பலில் மின் தடை ஏற்பட்டதாகவும், கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததால், உடனடியாக கப்பல் ஊழியர்கள் அதிகாரிகளை தொடர்புகொண்டு எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள், பாலத்தில் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தியுள்ளனர். பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Dali என்ற அந்த கப்பலில் பயணித்த ஊழியர்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததால், சரியாகச் சொன்னால், தங்கள் கப்பல் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கூறி உதவி கோரி அழைத்ததால், அந்த பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் மேரிலேண்ட் பகுதி போக்குவரத்துத் துறை அதிகாரிகளை எச்சரித்ததால், அவர்கள் உடனடியாக பாலத்தை மூடியுள்ளார்கள். அதனால் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்று கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், சரியான நேரத்தில் அதிகாரிகளை எச்சரித்த கப்பல் ஊழியர்களின் செயலை பாராட்டியுள்ளார்.

அத்துடன், மேரிலேண்ட் ஆளுநரான Wes Mooreம், கப்பல் ஊழியர்களின் அவசர எச்சரிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஹீரோக்கள் என்றும் அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version