உலகம்

மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்த உள்துறை?

Published

on

மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்த உள்துறை?

மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மையான எண்ணிக்கையை, பிரித்தானிய உள்துறை அலுவலகம் மறைத்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பிரித்தானியாவில் மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து உள்துறை அமைச்சகத்திடம் பிரித்தானிய ஊடகம் ஒன்று கேட்டுள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை, பிரித்தானியாவில் மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் எத்தனை பேர் என்று உள்துறை அமைச்சகத்திடம் பிரித்தானிய ஊடகம் ஒன்று கேட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த உள்துறை அலுவலகம், பிரித்தானியாவில் மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் என்று கூறியுள்ளது.

இந்த விடயத்தை அந்த பத்திரிகை பிரசுரித்ததைத் தொடர்ந்து அந்த பத்திரிகையை அணுகிய ஒரு நபர், தான் அதே காலகட்டத்தில் பிரித்தானியாவில் மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் எத்தனை பேர் என்று உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாகவும், அவர்கள், 14 பேர் என தனக்கு பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே, மீண்டும் பிரித்தானிய உள்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்ட அந்த பத்திரிகை, இந்த விடயம் குறித்து விளக்கம் கேட்க, உங்கள் இருவருடைய கேள்விகளுக்கேற்ற பதிலை நாங்கள் கொடுத்தோம் என்று உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.

அதாவது, அந்த பத்திரிகை சார்பில், உள்துறை அலுவலகத்திடம், புகலிடக்கோரிக்கை மையங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்ன என்று கேட்கப்பட்டதாம்.

அந்த நபரோ, புகலிடக்கோரிக்கை மையங்களில் தங்கியிருந்தவர்களில் உயிரிழந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று கேட்டிருந்தாராம்.

அதாவது, அந்த பத்திரிகையின் கேள்விக்கு, புகலிடக்கோரிக்கை மையங்களில் தங்கியிருக்கும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டதாம்.

அதே நேரத்தில் அந்த நபர், இதற்கு முன் புகலிடக்கோரிக்கை மையங்களில் தங்கியிருந்தவர்கள் உட்பட, எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று கேட்டுள்ளாராம். ஆகவே, புகலிடக்கோரிக்கை மையங்களில் உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி, முன்பு அங்கு தங்கியிருந்து, வேறு இடங்களில், அதாவது மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் உட்பட அனைவரின் எண்ணிக்கையும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. உங்கள் கேள்விக்குத் தக்கதாகத்தான் உங்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அலுவலகம் பதிலளித்துள்ளது.

இது, மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே மறைக்கும் அரசின் முயற்சி என்கிறார், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியவரான Deborah Coles என்பவர்.

ஏற்கனவே உள்துறை அலுவலகத்தின் கொள்கைகள் சில புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிவோம் என்று கூறியுள்ள அவர், இது தவிர்க்கப்படவேண்டிய விடயம் என்று கூறியுள்ளார்.

Exit mobile version