உலகம்

ரிஷிக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்கும் திட்டம்

Published

on

பிரித்தானிய பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான தகவல் பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவண்ணம் உள்ளது.

இந்நிலையில், அத்திட்டம் பிசுபிசுத்துப்போனதாக நாடாளுமன்றத்துக்கே சென்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்ட பிரித்தானிய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ரிஷி சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான லீ ஆண்டர்சன் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட சில சர்ச்சைக் கருத்துகள், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக கொடுத்தவரான Frank Hester என்பவர் இனரீதியாக முன்வைத்த விமர்சனம், ருவாண்டா திட்டம் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பு என பல்வேறு விடயங்கள் பிரதமர் ரிஷிக்கு கடந்த சில வாரங்களாக பெரும் தொல்லையைக் கொடுத்துவருகின்றன.

ஆகவே, ரிஷி சுனக்குக்கு பதிலாக பென்னி மோர்டாண்ட் என்னும் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் பரவத்துவங்கின.

இந்நிலையில், பிரதமர் ரிஷி, கடைசி இருக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட ரிஷி, கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், தனக்கெதிரான சதிகளும், அதிருப்தியும், தன்னைக் காயப்படுத்தவில்லை என்றும், அவை அனைத்து கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே காயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் உரைக்குப் பின் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான Jonathan Gullis என்பவர், கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த காட்சிகளை நேரடியாகப் பார்த்த ஊடகவியலாளர்கள், ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்கும் திட்டம் பிசுபிசுத்துப்போனதாக தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், ரிஷிக்கு பதிலாக பென்னி மோர்டாண்ட் என்பவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படப்போவதாக கூறப்பட்ட விடயம் கட்டுக்கதை என்று கூறியுள்ள Beth Rigby என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், பென்னியைப் பொருத்தவரை தலைமைக்கு மிகவும் உண்மையாக இருப்பவர் என்றும் கடின உழைப்பாளி என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version