உலகம்

தெருவில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்… தூதரகங்களில் ஊழியர்கள் வெளியேற்றம் : பற்றியெரியும் நாடு

Published

on

ஹைதி நாட்டில் தொடரும் வன்முறை மற்றும் பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு மத்தியில், தெருவெங்கும் சடலங்கள் சிதறிக்கிடப்பதாகவும் பல நாடுகள் தங்கள் தூதர அதிகாரிகளை வெளியேற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து 600 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஹைதி நாடு, உள்நாட்டு மோதல்களால் மொத்தமாக சிதைந்து வருகிறது. வட அமெரிக்காவின் சோமாலியா என குறிப்பிடும் அளவுக்கு அங்கே நிலைமை மோசமடைந்துள்ளது.

ஹைதியின் பேரழிவை தடுக்க தாமதித்தால், பெருந்திரளான அகதிகள் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நிபுணர்கள் பலர் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பல்வேறு உயர்தர ஹொட்டல்கள் மற்றும் குறைந்தது ஒரு டசின் தூதரங்கள், தங்கள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றி வருகின்றனர். பிரதமர் Ariel Henry பதவி விலக கடந்த வாரமே ஒப்புக்கொண்ட பின்னரும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இதனிடையே அண்டை நாடுகள் தங்கள் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன. வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தூதரகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் உட்பட 300 பேரை வெளியேற்றியதாக செவ்வாயன்று, டொமினிகன் குடியரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஹைதி விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தங்கள் குடிமக்களை வெளியேற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹைதியில் இருந்து நூறாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மட்டுமின்றி பலாத்காரம், தீவைப்பு மற்றும் பணத்திற்காக ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட கொடூர சம்பவங்களும் அரங்கேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறபப்டுகிறது.

உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் ரத்தம், ஆக்சிஜன் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version