உலகம்

நடிகை விஜயலட்சுமிக்கு கடைசி வாய்ப்பு.., சீமான் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

Published

on

நடிகை விஜயலட்சுமிக்கு கடைசி வாய்ப்பு.., சீமான் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராகாததால், ஏப்ரல் 2- ம் திகதி ஆஜராகுமாறு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், என்னை அவர் பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 -ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பின்னர், சீமான் தரப்பு பேசியதை தொடர்ந்து அந்த வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர், ” வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது, மார்ச் 19 -ம் திகதி விஜயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இன்று ஆஜராகவும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ”நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2- ம் தேதி ஆஜராகுமாறு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அப்போது அவர் நேரில் ஆஜராகாவிட்டால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் எனவும் அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version