உலகம்

ஹமாஸ் தலைவர்களுடன் ஆலோசனை முன்னெடுத்த ஹவுதிகள்

Published

on

ஹமாஸ் தலைவர்களுடன் ஆலோசனை முன்னெடுத்த ஹவுதிகள்

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொருட்டு, முதல் முறையாக ஹமாஸ் தலைவர்களும் ஏமனின் ஹவுதிகளும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஹமாஸ் மற்றும் ஹவுதிகளுடன் ஈராக்கை சேர்ந்த சில குழுக்கள், லெபனானின் ஹிஸ்புல்லா ஆகியோர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து பல மாதங்களாக செங்கடல் பாதையை பயன்படுத்தும் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாங்கள் குறி வைத்து வருவதாகவும், காஸா மக்களுக்காக இதை தாங்கள் முன்னெடுப்பதாகவும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹமாஸ் தலைவர்கள் மற்றும் ஹவுதிகளுடனான அரிதான சந்திப்பானது கடந்த வாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சந்திப்பானது எங்கே முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

தெற்கு காசாவின் ரஃபாவில் இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலைப் பற்றி ஹவுதிகளும் ஹமாஸ் தலைவர்களும் விவாதித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. காசாவில் ஹமாஸின் கடைசி கோட்டையான ரஃபாவிலும் அதைச் சுற்றியும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.

பெரும்பாலானோர் இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பான இடமென கருதி ரஃபா பகுதியில் திரண்டவர்கள் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச அழுத்தத்தை மீறி ரஃபாவில் இராணுவ நடவடிக்கைக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Exit mobile version