உலகம்

புற்றுநோயால் மரணமடைந்த மனைவி: பிரிவைத் தாங்க முடியாமல் கணவர் எடுத்த முடிவு

Published

on

பிரித்தானியப் பெண் ஒருவர் புற்றுநோயால் மரணமடைய, மனைவியின் பிரிவைத் தாங்க இயலாமல் தவித்த கணவர் மோசமான முடிவொன்றை எடுத்தார்.

இங்கிலாந்தின் Norwich என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆடம் (Adam Thompson, 39). ஆடமின் மனைவி லூசி (Lucy, 44). மனைவி மீது அப்படியொரு பிரியம் ஆடமுக்கு.

2009ஆம் ஆண்டு லூசி நிறுவிய நிறுவனமொன்றில் 2016ஆம் ஆண்டு இணை இயக்குநராக இணைந்தார் ஆடம். இருவருக்கும் காதல் ஏற்படவே, 2019ஆம் ஆண்டு Norwich தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

உண்மையில், அதற்கு முன்பே லூசிக்கு புற்றுநோய் தாக்கியிருந்தது. சிகிச்சைக்குப் பின், பிரச்சினை ஒன்றும் இருக்காது, திருமணம் செய்துகொள்ளலாம் என மருத்துவர்கள் ஒப்புதலளித்தபிறகுதான் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஆனால், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், லூசியின் கல்லீரலில் மீண்டும் புற்றுநோய் உருவானதுடன், பல புற்றுநோய்க் கட்டிகள் உருவாகியதும் தெரியவந்தது.

தன் காதல் மனைவிக்கு புற்றுநோய் என தெரியவந்ததும், மனைவியைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் ஆடம்.

ஆடம் ஐந்து ஆண்டுகளாக மனைவியைக் கவனித்துவந்தும், லூசி உயிரிழந்துவிட்டார். மனைவியின் இழப்பைத் தாங்கமுடியாமல் தவியாய்த் தவித்துவந்தார் ஆடம்.

இந்நிலையில், ஒருநாள் ஆடம் அலுவலகத்துக்கு வரவில்லை என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. உடனே அவரது வீட்டுக்குச் சென்ற அவர்கள், ஆடம் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடற்கூறு ஆய்வில், லூசியின் புற்றுநோய் மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டு ஆடம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

மனைவி இருக்கும்போதே அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வோர் பலர் வாழும் உலகில், மனைவி மரணமடைந்ததால், அவள் இல்லாமல் எப்படி வாழ்வது என்று எண்ணி மரணத்தைத் தழுவிக்கொண்ட ஆடம் எடுத்த முடிவு மோசமானதுதான் என்றாலும், அவர் மனைவி மீது வைத்த அன்பை நிச்சயம் குறை சொல்ல முடியாது.

Exit mobile version