இலங்கை

கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை : உயிர் தப்பியவரின் நிலைமை

Published

on

கனடாவில் இலங்கை குடும்பத்தினர் படுகொலை : உயிர் தப்பியவரின் நிலைமை

கனடாவில் வாழ்ந்துவந்த இலங்கையர்களான 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

கனடாவின் ஒட்டாவா மாகாணத்திலுள்ள Barrhaven என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த, இலங்கையர்களான தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர், அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவரால் கொல்லப்பட்டனர்.

மேலும், தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த மற்றொரு நபரான அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் தாக்குதலில் பலியாகியுள்ளார்.

தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க, தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டி ஸோய்சாவை தனுஷ்க குடும்பத்தினர் தங்களுடன் தங்க அனுமதித்திருந்த நிலையில், அவர் எதற்காக இரண்டு மாதக் குழந்தை உட்பட தனுஷ்க குடும்பத்தினரைக் கொடூரமாக கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

பொலிசாரைப் பொருத்தவரை, இந்த சம்பவத்துக்கு சாட்சி இரண்டே பேர். ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள டி ஸோய்சா, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனுஷ்க.

குடும்பம் முழுவதையும் இழந்த அதிர்ச்சியில் இருக்கும் தனுஷ்க, தன் குடும்பத்தைக் கொன்ற டி ஸோய்சாவுடன் போராடும்போது, அவரது கைவிரல்கள் மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறார்.

தனுஷ்கவை மருத்துவமனையில் சந்தித்த அவரது குடும்ப நண்பரான Naradha Kodituwakku என்பவர் கூறும்போது, தனுஷ்கவின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தாலும், தன் குடும்பத்தையே கொன்ற டி ஸோய்சாவை, அந்தப் பிள்ளை சின்னப்பையன் தானே என்று கூறியதாக தெரிவிக்கிறார். தன் குடும்பத்தையே இழந்தாலும் தனுஷ்க மனதில் இரக்கம் இருப்பதையே இது காண்பிக்கிறது என்கிறார் Kodituwakku.

குடும்பத்தையே இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மகனுக்கு ஆதரவாக இருப்பதற்காக தனுஷ்கவின் சகோதரரும், அவரது தந்தையும் விரைவில் கனடா வர இருக்கிறார்கள்.

ஆறு பேர் உயிரிழந்த துக்கத்தை ஆற்றுவது மிகப்பெரிய கடினம் என்பது கொஞ்சமும் மறுக்கமுடியாத உண்மைதான், அதே நேரத்தில் இன்னொரு பெரிய கவலை என்னவென்றால், ஆறு பேரின் உடல்களை இலங்கைக்குக் கொண்டு செல்ல மிகப்பெரிய தொகை செலவாகும் என்பதும்தான்!

Exit mobile version