உலகம்

கோழைகளாக இருக்கவேண்டாம்… ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்

Published

on

கோழைகளாக இருக்கவேண்டாம்… ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்

ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி, உக்ரைனின் கூட்டாளிகள் கோழைகளாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

செக் குடியரசுக்கு, அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அந்நாட்டின் ஜனாதிபதியான Petr Pavelஉடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசும்போது, நாம் கோழைகளாக இருக்கக்கூடாது என்னும் ஒரு தருணத்தை நாம் நிச்சயம் எட்டிக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

உக்ரைனின் நட்பு நாடுகள் போரில் உக்ரைனுக்கு உதவவேண்டுமென அழைப்பு விடுத்த மேக்ரான், மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதற்காக உக்ரைன் செல்வதற்கு தனது ஆதரவையும் உறுதி செய்துள்ளார். மேலும், ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யர்களின் சொத்துக்களைக் கொண்டு உக்ரைனுக்கு உதவுவதற்கும் தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஆனால், செக் குடியரசு மட்டுமல்ல, ஜேர்மனியும் மேக்ரானின் கருத்தை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. செக் குடியரசின் ஜனாதிபதி, மேற்கத்திய நாடுகள் நேரடியாக போரில் தலையிடுவதன் மூலம் சிவப்புக் கோட்டைத் தாண்டக்கூடாது என்று கூற, ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரோ, மேக்ரானின் கருத்துக்கள் பயனளிப்பவையாக இல்லை என்றும், உக்ரைனுக்கு வீரர்களை அனுப்புவது தைரியமா அல்லது கோழைத்தனமா என்பதைக் குறித்து விவாதிக்க அவசியமில்லை என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதற்காக உக்ரைன் சென்றால், அவர்கள் அணு ஆயுதப் போரை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version