உலகம்

மாயமான அலெக்ஸி நவல்னி சடலம்… வெளியான மரண காரணம்

Published

on

மாயமான அலெக்ஸி நவல்னி சடலம்… வெளியான மரண காரணம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி எந்த அறிகுறியும் இன்றி, திடீரென்று ஏற்படும் மரணத்தால் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 47 வயதான அலெக்ஸி நவல்னி திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்தார். சிறைக்குள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே அவர் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

தீவிரவாத செயல்பாடு காரணமாக அலெக்ஸி நவல்னி கடந்த 2021ல் இருந்தே சிறையில் இருந்து வருகிறார். தற்போது நவல்னியின் சடலம் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நவல்னியின் தாயாரும் அவர் தரப்பு சட்டத்தரணியும் உடலை மீட்கும் பொருட்டு சவக்கிடங்கு சென்ற நிலையில், பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டும், அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நவல்னியின் இறப்புக்கு காரணம் விளாடிமிர் புடின் தான் என உலகத் தலைவர்கள் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில்,

நவல்னிக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவரது மரணம் புடின் மற்றும் அவரது சகாக்களின் விளைவு என்பதில் சந்தேகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு படுகொலை என்றே நம்புவதாக பிரித்தானியா தரப்பு குறிப்பிட்டுள்ளது. பல முறை நவல்னியை கொல்ல புடின் முயன்றுள்ளார் என்றும், ரஷ்ய மக்கள் விரும்பும் சுதந்திரத்தை நவல்னி பெற்றுத்தருவார் என்ற அச்சமே இதற்கு காரணம் என்றும் பிரித்தானிய தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், நாட்டின் எதிர்கட்சித் தலைவராய் இருக்கட்டும், அல்லது அவருக்கு இலக்காகத் தோன்றும் வேறு யாராக இருந்தாலும், யாரை வேண்டுமானாலும் புடின் கொன்றுவிடுவார் என்றார்.

Exit mobile version