உலகம்
ஒருநாள் அது நடந்தே தீரும்… இளவரசர் ஹரியைக் குறித்த டயானாவின் அச்சம்
ஒருநாள் அது நடந்தே தீரும்… இளவரசர் ஹரியைக் குறித்த டயானாவின் அச்சம்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தைச் தொடர்ந்து, வில்லியம் ஹரி உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்து உலகமே அறியும்.
ஆனால், அவர்களுக்குள் இப்போது அல்ல, சிறுவயது முதலே போட்டி இருந்ததாகவும், குறிப்பாக ஹரி தன் அண்ணனுடன் பகையை வளர்த்துக்கொள்ளக்கூடும் என்று அவர்களுடைய தாயாகிய இளவரசி டயானா அஞ்சியதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ராஜ குடும்ப எழுத்தாளரான Ingrid Seward என்பவர் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், இளவரசர்கள் ஹரிக்கும் வில்லியமுக்கும் இடையிலான உறவு எப்போதுமே மோதல் போக்கிலானதாகவே அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தான் இரண்டாவது இடத்திலிருப்பவர், அதாவது, முதலிடம் தனக்கு இல்லை, அண்ணன் வில்லியமுக்குதான் என்பதைக் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையை ஹரி வளர்த்துக்கொண்டதாக தெரிவிக்கிறார் Ingrid.
ஆகவே, தன் தாய் தனக்கு மட்டும்தான் என்ற எண்ணம் கொண்ட ஹரி, அவரை தன் அண்ணனுடன் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்றும், அதனால், அவரது மன நிலையைப் புரிந்துகொண்ட டயானா, ஹரியை ’என் சின்னக் குழந்தை’ என அழைக்க முடிவு செய்ததாகவும் கூறுகிறார் Ingrid.
ஹரி சிறு வயதில் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் இருந்ததாகவும், அதனால் தன் மகனை அறிவில்லாதவன் என மக்கள் நினைக்கப்போகிறார்கள் என டயானா அஞ்சியதாகவும் குறிப்பிட்டுள்ளார் Ingrid.
புத்தகத்தை எடுத்துப் படிப்பதற்கு பதிலாக, எப்போதும், எல்லாவற்றிலும், தன் அண்ணன் வில்லியமுடன் போட்டி போடவேண்டும் என்ற எண்ணமே ஹரிக்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் Ingrid.
ஆக, ஹரி, வில்லியமை தன் எதிராளியாக எண்ணும் நிலை உருவாகலாம் என சிறுவயதிலேயே அஞ்சியுள்ளார் டயானா. இப்போது ராஜ குடும்பத்தில் நிலவும் சூழலைப் பார்த்தால், டயானா அஞ்சியது நடந்துவிட்டது என்றே கூறலாம்.