உலகம்

வதந்தியை பரப்பிய இயக்குநர் பாக்யராஜ்? நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு தாக்கல்

Published

on

வதந்தியை பரப்பிய இயக்குநர் பாக்யராஜ்? நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் இருக்கும் பவானி ஆற்றில் பலர் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாக இயக்குநர் பாக்யராஜ் வெளியிட்ட வீடியோவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைய வனப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலின் அருகில் இருக்கும் ஆற்றங்கரையில், குளிப்பதற்காக வரும் நபர்கள் ஆற்று நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதை ஒருவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் உடலை மீட்டு எடுப்பதற்காக பணம் கேட்டு வருவதாகவும் அந்த வீடியோ மூலம் இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியதோடு மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.

பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தப்படுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றவையாகும்.

அது செயற்கையான கொலை என்று குறித்து எந்தவொரு வழக்கும் காவல் நிலையத்தில் பதியப்படவில்லை.

2023 ஆம் ஆண்டில் இருந்து “Life Guards” என்ற பெயரில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவினர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.

தற்செயலாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 6 ஆக குறைந்துள்ளது.

மேலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் பதிவான அனைத்து வழக்குகளையும் முறையாக விசாரித்து இறப்பிற்கான காரணமும் கண்டறிப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறு பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை என காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் பாக்யராஜ் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டுச் சங்கச் செயலர் மஸ்தான் என்பவரே மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், இயக்குநர் பாக்யராஜ் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றை சுற்றி இருக்கும் மக்களை குறித்தே இவ்வாறு பேசியுள்ளார்.

இவர் வெளியிட்ட அந்த வீடியோவானது தமிழகம் முழுவதும் பரவியது. வீடியோவில் அவர் கூறியது போல் எந்தவொரு விடயமும் நடக்கவில்லை என பொலிஸாரும் தெரிவித்திருந்தார்கள். அவர் குறிப்பிட்டதுபோல பவானி ஆற்றில் செய்யவும் முடியாது.

மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் மக்களை அவர் அவதூறாக பேசுவது போன்றே இந்த தகவல் இருக்கிறது. பவானி ஆற்றில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மீட்புப் பணிகளுக்கு, பொதுமக்கள் உதவியாக இருக்கிறார்கள்.

உதவி செய்யும் மக்களை தடுக்கும் விதத்திலேயே அவர் அவ்வாறு பேசியுள்ளார். எனவே பொய்யான வதந்தியை பரப்பிய பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version