உலகம்
கால்நடை தீவனத்தில் உயிர்வாழும் மக்கள்… பல நாட்கள் பட்டினியாக சிறார்கள்: கலங்கவைக்கும் காஸா
கால்நடை தீவனத்தில் உயிர்வாழும் மக்கள்… பல நாட்கள் பட்டினியாக சிறார்கள்: கலங்கவைக்கும் காஸா
காஸாவின் வடக்கு பகுதிக்கு உதவிகள் அனுப்புவதை தொடர்ந்து தடுத்துவரும் இஸ்ரேல் நிர்வாகத்தால், அங்குள்ள மக்கள் கால்நடை தீவனத்தில் உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்கள் பல நாட்கள் பட்டினியாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிநீருக்காகவும் பிற தேவைகளுக்காவும் மக்கள் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் பாதிக்கும் மேற்பட்ட உதவிகள் அப்பகுதி மக்களுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவிகள் பெறும் மக்கள், அல்லது எங்கே விநியோகிக்கப்படுகிறது என்பது தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எந்த உதவிகளும் பெற முடியாமல் சுமார் 300,000 மக்கள் வடக்கு பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும், பஞ்சம் ஏற்படும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதாகவும் ஐ.நா தரப்பு எச்சரித்துள்ளது.
6 மைல்கள் நடந்து சென்று
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 14 சதவிகிதம் அளவுக்கு உணவு உதவிகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் 56 சதவிகிதமாக அது அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.
தாயார் ஒருவர், தமது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியாக இருப்பதை தாங்க முடியாமல் 6 மைல்கள் நடந்து சென்று தமது சகோதரியிடம் உதவி கோரியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே உணவு உட்பட உதவிகள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள், அப்படியான ஒப்பந்தம் மட்டுமே இஸ்ரேல் ராணுவத்தை காஸாவில் இருந்தும் வெளியேற்றும் என கூறுகின்றனர்.