உலகம்

கடைசியில் லண்டன் ஹொட்டல் அறையில் இரவு தங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி: என்ன நடந்தது

Published

on

கடைசியில் லண்டன் ஹொட்டல் அறையில் இரவு தங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி: என்ன நடந்தது

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அமெரிக்காவில் இருந்து பறந்துவந்த இளவரசர் ஹரி, அரண்மனையில் எங்கும் தங்காமல் இரவு ஹொட்டலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஏற்கனவே தமது மகன்கள் இருவருக்கும், சகோதரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை மன்னர் சார்லஸ் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தந்தையின் உடல்நிலை குறித்து நேரில் அறிந்துகொள்ளும் பொருட்டும் அவருக்கு ஆறுதல் கூறும் பொருட்டும் கலிபோர்னியாவில் வசித்துவரும் இளவரசர் ஹரி உடனடியாக லண்டன் திரும்பினார்.

மன்னரை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரி தம்மை சந்திக்க வருகிறார் என்ற தகவல் தெரிந்திருந்ததால், அவர் வரும் வரையில், மன்னர் சார்லஸ் புறப்பட தயாராக இருந்த பயணத்தை தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பகை மறந்து சகோதரர்கள் இருவர் ஒன்றிணையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் சந்திப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

தமது மனைவி கேட் மிடில்டன் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால், அவரது கவனம் முழுவதும் மனைவி மீதே உள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன் ஈஸ்டர் பண்டிகை முடியும் மட்டும் இளவரசர் வில்லியம் விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தான் சுமார் 5,000 மைல்கள் பயணித்து லண்டன் திரும்பியுள்ளார் இளவரசர் ஹரி. தந்தையுடன் சுமார் 45 நிமிடங்கள் பேசிய அவர், இரவு அரச குடும்பத்து மாளிகைகளில் எங்கும் தங்காமல் ஹொட்டல் ஒன்றில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.

தமது இரு பிள்ளைகளுடன் மனைவி மேகன் மார்க்கல் அமெரிக்காவில் தனியாக இருப்பதால், இளவரசர் ஹரி லண்டனில் அதிக நாட்கள் தங்கும் வாய்ப்பு குறைவு தான் என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், சகோதரர் வில்லியத்தை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால், அதை ஹரி கண்டிப்பாக தவறவிடமாட்டார் என்றே கூறுகின்றனர்.

 

Exit mobile version