உலகம்
கட்டுமான பணியின்போது மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் மரணம்.., தமிழகத்தில் சோகம்
கட்டுமான பணியின்போது மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் மரணம்.., தமிழகத்தில் சோகம்
கட்டுமான பணியின்போது அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டமான நீலகிரியில் உள்ள உதகை லவ்டேல் பகுதி தேயிலை எஸ்டேட்டில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் அருகே பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் ஒன்று இருந்தது.
இந்நிலையில், தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 10 ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு மண் சரிந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உடனடியாக ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் உயிரிழந்தனர்.
இதில், இறந்தவர்கள் அனைவரும் உதகை காந்திநகரை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.