உலகம்

மிஸ் ஜப்பான் அழகிப்பட்டம் வென்ற உக்ரைனிய பெண்: பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்…

Published

on

மிஸ் ஜப்பான் அழகிப்பட்டம் வென்ற உக்ரைனிய பெண்: பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்…

மிஸ் ஜப்பான் அழகியாக உக்ரைன் வம்சாவளி இளம்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், ஜப்பானில் கேள்விகள் எழ காரணமாக அமைந்தது.

சமீபத்தில் ஜப்பானில் நடந்த மிஸ் ஜப்பான் அழகிப் போட்டியில், கரோலினா ஷினோ (Carolina Shiino, 26) என்னும் இளம்பெண் முதலிடத்தைப் பிடித்தார். கரோலினாவின் தாய் உக்ரைன் நாட்டவர். ஆனால், அவர் ஜப்பான் நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். கரோலினாவுக்கு 5 வயது ஆனதும் அவரது குடும்பம் ஜப்பானுக்குக் குடிபெயர்ந்துள்ளது.

கரோலினா மிஸ் ஜப்பான் அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜப்பான் பரம்பரையில் வராத ஒரு பெண் எப்படி மிஸ் ஜப்பான் அழகியாக தேர்வு செய்யப்படலாம் என ஜப்பான் நாட்டு மக்கள் இணையத்தில் கேள்வி எழுப்பினார்கள். அத்துடன், ஐரோப்பிய முகங்கள்தான் அழகா, ஆசிய முகங்கள் அழகில்லையா என்னும் கோணத்திலும் கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், கரோலினா தனது மிஸ் ஜப்பான் அழகிப் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்கும், ஜப்பான் பரம்பரையில் வராத ஒரு பெண் மிஸ் ஜப்பான் அழகியாக தேர்வு செய்யப்பட்டதால் எழுந்த சர்ச்சைக்கும் தொடர்பில்லை.

கரோலினாவின் உக்ரைன் பின்னணி தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கிடையில், ஜப்பான் ஊடகமான Shukan Bunshun, கரோலினாவுக்கும் திருமணமான சமூக ஊடகப் பிரபலமும் மருத்துவருமான ஒரு ஆணுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதை கரோலினா ஒப்புக்கொண்டதாக அழகிப்போட்டி நடத்தும் அமைப்பினர் நேற்று தெரிவித்த நிலையில், கரோலினா தனது அழகிப்பட்டத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

Exit mobile version