உலகம்
மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல…
மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல…
பிரித்தானியாவில், பிரதமர் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. அதில் அவர் நேரடியாக பங்குபெறவிலை என்றாலும், அவர் பங்குதாரராக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை பிரித்தானியாவில் வளர்க்க உதவுவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அமைச்சர் ஒருவர் வாக்களித்ததாக புகார் எழுந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி. அக்ஷதா, இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் என். ஆர். நாராயணமூர்த்தியின் மகள் ஆவார்.
அக்ஷதாவுக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 624 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பங்குகள் உள்ளன. தனது பங்குகள் மூலம் கடந்த ஆண்டில் அக்ஷதா 13 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, ரிஷி, பிரித்தானியாவில் இதுவரை பிரதமர்களாக இருந்தவர்களில் அதிக பணக்கார பிரதமராகியுள்ளார்.
ஏற்கனவே, பணம் தொடர்பான பல சர்ச்சைகளில் அக்ஷதாவின் பெயர் அடிபட்ட நிலையில், தற்போது, அவர் சார்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
பிரித்தானிய வர்த்தக அமைச்சரான டொமினிக் ஜான்சன் (Lord Dominic Johnson) என்பவர், பிரித்தானியாவில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாக அந்த நிறுவனத்தாரிடம் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இன்ஃபோசிஸ் நிறுவனம் வளர்ச்சியடைவதைத் காண தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள ஜான்சன், அதற்கு உதவுவதற்காக, தன்னால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலைப் பெற்று ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் பிரச்சினை எழுப்பிய லேபர் கட்சியினர், இது மிகவும் தவறு என்றும், தனிப்பட்ட முறையில் பிரதமருக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்துக்கு பிரித்தானியாவில் விஐபி அந்தஸ்து கொடுக்கப்பட்டது தொடர்பான சீரியஸான கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவேண்டியிருக்கும் என்றும், லிபரல் டெமாக்ரட் கட்சியினர், இந்த விடயம் குறித்து முழு வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.