உலகம்

கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் இளம்பெண்ணின் திருமணத்துக்கு உருவாகியுள்ள சிக்கல்

Published

on

கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் இளம்பெண்ணின் திருமணத்துக்கு உருவாகியுள்ள சிக்கல்

கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகள், இந்திய மாநிலம் ஒன்றிலுள்ள இளம்பெண்களின் திருமணத்துக்கு தடையாக மாறியுள்ளன.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், மனைவியை கனடாவுக்குக் கல்வி கற்க அனுப்பிவிட்டு, அவர்கள் மூலம் கனடா செல்லும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்.

கனடாவுக்குச் சென்று கல்வி கற்றதும், கணவனைக் கழற்றிவிட்ட பெண்கள் சிலர் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

வசதியுள்ள ஆண்கள், பெண் பார்த்ததும், மணமகளை கனடாவுக்கு அனுப்பி படிக்க வைப்பதாகவும், அதற்கான செலவுகளை மணமகன் வீட்டார் ஏற்றுக்கொள்வதாகவும் பதிலுக்கு, மணமகள் கனடா சென்றபின் கணவனை கனடாவுக்கு அழைத்துக்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் நடைபெறும் திருமணங்கள் பஞ்சாபில் சர்வசாதாரணம்.

அப்படித்தான் சமீபத்தில் பல்லவி ஷர்மா என்ற பெண்ணை பெண் பார்த்துவிட்டுப் போனார்கள் பஞ்சாபிலுள்ள ஒரு குடும்பத்தினர். பல்லவி IELTS தேர்வை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

கனேடிய பல்கலை ஒன்றில் அவர் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், அவருக்கு கனடாவுக்குச் சென்று கல்வி கற்கும் அளவுக்கு வசதியில்லை.

ஆகவே, மணமகன் வீட்டார் பல்லவியை கனடாவுக்குக் கல்வி கற்க அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளார்கள். பதிலுக்கு, பல்லவி கனடா சென்றபின் தன் கணவனை கனடாவுக்கு அழைத்துக்கொள்ளவேண்டும் என்பது இருவீட்டாருக்குள் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம்.

ஆனால், சமீபத்தில் கனடா அறிவித்த புதிய புலம்பெயர்தல் விதிகள், அவரது கனடா கனவுக்கும், ஏன், திருமணத்துக்குமே சிக்கலை உருவாக்கிவிட்டன.

அதாவது, புதிய விதிகளின்படி, இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்காக கனடா செல்வோர், தங்கள் துணைவருக்கு கனடாவில் பணி அனுமதி பெற்றுத்தர அனுமதி இல்லை. முதுகலைப் பட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு, சட்டம் அல்லது மருத்துவம் கற்கும் மாணவ மாணவியர்தான் தங்கள் துணைவருக்கு கனடாவில் பணி அனுமதி பெற்றுத்தரமுடியும்.

ஆக, பல்லவியின் கனவு கலைந்துபோனது. பல்லவி மட்டுமல்ல, அவரைப் பெண்பார்த்துச் சென்ற நபருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அதாவது, பல்லவி இளங்கலைப் பட்டப்படிப்புதான் படிக்க இருக்கிறார். ஆகவே, அவரால் தனது கணவனை கனடாவில் பணி செய்வதற்காக அழைத்துச் செல்ல முடியாது. பல்லவி வீட்டிலோ அவரை கனடாவுக்கு அனுப்பிக் கல்வி கற்கவைக்க வசதியில்லை. அவர் இளங்கலை முடித்து, முதுகலை முடிக்கும்வரை எந்த மணமகனும் காத்திருக்கப் போவதில்லை.

அவர், முதுகலை பட்டபடிப்பு படிக்கப்போகும் பெண் ஒருவரைத் தேடச் சென்றுவிடுவார். ஆக, பல்லவியின் கனடா கனவும் கலைந்து, அவரது திருமண திட்டங்களும் நிறைவேறாமற்போய்விட்டன.

ஆக, புதிய புலம்பெயர்தல் விதிகள், பல்லவிக்கு மட்டுமல்ல, அவரைப்போலவே கனடாவில் கல்வி கற்கச் செல்வதற்காக மணமகன் வீட்டாரை நம்பியிருக்கும் பல பெண்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Exit mobile version