உலகம்

பிரான்சில் இரண்டு ஆண்டுகள் வீடு ஒன்றில் தனியாக விடப்பட்ட சிறுவன்: தாய்க்கு சிறை

Published

on

பிரான்சில் இரண்டு ஆண்டுகள் வீடு ஒன்றில் தனியாக விடப்பட்ட சிறுவன்: தாய்க்கு சிறை

பிரான்சில், தன் மகனை இரண்டு ஆண்டுகள் தனியாக வாழ விட்ட தாய் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலுள்ள Nersac என்னும் நகரில், அக்கம்பக்கத்தவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு, தனியாக, மின்சாரமோ, வீட்டை வெப்பப்படுத்தும் கருவியோ இல்லாமல், தனது வீட்டில் தனியாக 9 வயது சிறுவன் ஒருவன் வாழ்ந்துவந்த விடயம் பிரான்சை பரபரப்பாக்கியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த சிறுவன், இரண்டு ஆண்டுகளாக கேனில் அடைக்கப்பட்ட உணவு, கேக் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டார் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு தினமும் ஒழுங்காக பள்ளிக்கும் சென்றுவந்துள்ளதால் அவன் தனியாக வாழ்கிறான் என யாருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை.

எப்போதும் முகத்தில் புன்னகையுடன், சுத்தமாக, அமைதியான நல்ல மாணவன் என பெயர் வாங்கிய அந்தச் சிறுவனின் தாயாகிய அலெக்சாண்ட்ரா (Alexandra, 39) என்னும் பெண்ணோ, இரண்டு கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு வீட்டில் தன் ஆண் நண்பருடன் வாழ்ந்தும், எப்போதாவதுதான் அவனைப் பார்க்கவருவாராம்.

அப்படி வரும்போது, எப்போதாவது அவர் மகனுக்கு உணவுப்பொருட்கள் வாங்கிவருவாராம்.

அந்த சிறுவனுக்கு அவ்வப்போது உணவு கொடுக்கும் பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு அவனைக் குறித்து சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நகர மேயருக்கும், பொலிசாருக்கும் தகவலளித்துள்ளார்கள்.

இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு, அந்த சிறுவனின் தாயாகிய அலெக்சாண்ட்ரா நகர மேயரான பார்பரா (Barbara Couturier) என்பவரை சந்தித்து உதவி கோரியிருக்கிறார். அவர் அலெக்சாண்ட்ராவுக்கு சில வவுச்சர்களைக் கொடுக்க, அவரோ எனக்கு வவுச்சர்கள் வேண்டாம், கேனில் அடைக்கப்பட்ட உணவு போதும் என்று கூற, பார்பராவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நகரில் ஒரு சிறுவன் தனியாக வாழ்வதாக தனக்கு புகார் வர, இரண்டு விடயங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகப்பட்ட பார்பரா பொலிசாரை அனுப்ப உண்மை வெளியே வந்துள்ளது.

விடயம் என்னவென்றால், 2020 முதல் 2022 வரை அந்தச் சிறுவன் தனியாகத்தான் வாழ்ந்துவந்திருக்கிறான். கைது செய்யப்பட்ட அலெக்சாண்ட்ராவுக்கு கடந்த வாரம் 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்ட்ராவின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அந்தச் சிறுவன், ஒரு குடும்பத்துக்குத் தத்துக்கொடுக்கப்பட்டுள்ளான்.

அதன் பிறகு அலெக்சாண்ட்ரா மகனை இரண்டு முறை மட்டும் சந்தித்த நிலையில், இனி தன் தாயை சந்திக்க தனக்கு விருப்பமில்லை என அந்தச் சிறுவன் கூறிவிட்டானாம்.

Exit mobile version