உலகம்
அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டியிருக்கிறார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு வரும் 22ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில், ‘ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை யாரும் அரசியலாகப் பார்க்கக் கூடாது.
கலைஞர் கூறியது போல், திமுகவினர் எந்த மதத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால், அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என தெரிவித்துள்ளார்.