உலகம்

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா: பிரித்தானிய பிரதமருக்கு மீண்டும் ஒரு வெற்றி

Published

on

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்த வகை செய்யும் மசோதா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டம்.

விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் பெரும்பாலும் கொண்டு செல்லப்படுவார்களேயொழிய, அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுதான் அச்சத்தை உருவாக்கியுள்ள விடயம்.

அதாவது, இப்படி ஒரு திட்டம் இருப்பதால், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர வெளிநாட்டவர்கள் பயப்படவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக சட்டம் ஒன்றைக் கொண்டுவர ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அரசு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில், ருவாண்டா திட்டம் தொடர்பான மசோதா ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கீழவை முன் முன்வைக்கப்பட்டது. அதாவது, ருவாண்டா பாதுகாப்பான நாடுதான் என்பதை அறிவிப்பதற்கான மசோதா இது.

அதில் தற்போது மூன்று கட்டங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது அந்த மசோதா. மசோதாவுக்கு ஆதரவாக 320 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 276 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, நாடாளுமன்றத்தின் கீழவையில் மசோதா வெற்றிபெற்றுவிட்டது.

என்றாலும், பிரதமருக்கு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று கூறமுடியாது. ஏனென்றால், அடுத்தபடியாக, நாடாளுமன்றத்தில் மேலவை முன் இந்த மசோதா முன்வைக்கப்படும். அங்கும் பிரதமருக்கு வெற்றி கிடைத்தால்தான், அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version