உலகம்
அதிகரிக்கும் புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கை: நடவடிக்கை எடுக்கவிருக்கும் பிரபல ஆசிய நாடு
புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உரிய வேலை வாய்ப்பும் சரிவடைந்துள்ள நிலையில், ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய மலேசியா முடிவெடுத்துள்ளது.
இதன் பொருட்டு 15 நாடுகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்களை மலேசியா மறுஆய்வு செய்யும் என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களை குறிப்பிட்ட சில அமைப்புகள் ஏமாற்றும் நடைமுறைகள் அதிகரித்துள்ளதாலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், மலேசியாவிற்கு வந்த பிறகு, தங்களுக்கு உறுதியளித்த வேலை தற்போது இல்லை என்ற நிலையில் குழப்பத்தில் உள்ளனர்.
அத்துடன் வேலையிடத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான துஸ்பிரயோகமும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீப வருடங்களில் பல நிறுவனங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக பயன்படுத்துவதால் அமெரிக்க தடைகளை எதிர்கொண்டுள்ளன.
மட்டுமின்றி பல தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இன்னும் விவசாயம் மற்றும் தோட்டத் துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஆனால் மற்ற துறைகளில் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் தொழிலாளர் மற்றும் உள்விவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.