உலகம்
நீருக்கடியில் முதல்வர் ஓவியம்- ஆசிரியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்
முதலமைச்சரை சந்திக்க வேண்டி “நீருக்கடியில்” முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் தன் ஓவிய திறமைக்கு அங்கீகாரம் வேண்டியும், முதல்வர் சந்திக்க வேண்டியும் நீரில் மூழ்கி “நீருக்கடியில்” முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தார்.
பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் சிறு வயதிலிருந்து ஓவியம் வரைதல், பத்தாம் வகுப்பு படிக்கும் போது திராவிட கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் உருவத்தை வரைந்து அவரிடம் காண்பித்து பாராட்டு பெற்றார், பின் ஓவிய ஆசிரியர் பயிற்சி முடித்து தற்போது பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார்.
ஓவியத்தில் வித்தியாசமாக வரைவது, இரண்டு கைகளால் வரைவது, நாக்கு மேல் ஓவியம், காதில் பிரஷ் வைத்து ஓவியம் வரைவது, வாயில் பிரஷ் பிடித்துக்கொண்டு ஓவியம் வரைவது, தன் தாடியை தூரிகையாக கொண்டு டாக்டர் அப்துல் கலாம் படம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தன் ஓவியத்தின் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் மரம் வளர்ப்போம், நீரின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கண் தானம் செய்தல், கொரானா விழிப்புணர்வு மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வரைந்து உள்ளார்.
ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் தன் கலைக்கு அங்கீகாரம் வேண்டி “CM – சார் சந்திக்கணும் ஆசை” என்ற வாசகத்துடன் நீரில் மூழ்கி “நீருக்கடியில்” 57 வினாடியில் மெழுகு கலர் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் உங்க திறமைக்கு கண்டிப்பாக முதல்வர் அவர்கள் அங்கீகாரம் தருவார் என்று ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.